
சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்கள் கூகுள் மேப் உதவியுடன் பணத்தை கொள்ளையடித்ததாக விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட 3 பேரின் வங்கி கணக்குகளை முடக்கி, சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரியானா மாநிலம் மேவாட் பகுதியை சேர்ந்த அமீர், வீரேந்தர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற கொள்ளையர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கி ஏ.டி.எம். கொள்ளை பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூகுள் மேப் மூலமாக எந்த இடத்தில் எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏ.டி.எம்.கள் உள்ளன என்பதை கண்டறிந்து கொள்ளையடித்துள்ளனர். விமானம் மூலம் சென்னைக்கு வரும் கொள்ளையன் அமீர், மீனம்பாக்கத்தில் இருந்து ஓலா அல்லது உபர் என்ற செயலி மூலமாக கார் புக் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் கோடம்பாக்கம் வந்து, அங்கு மற்றொரு SFS எனும் செயலி மூலம் இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து, அதில் சென்று சூளைமேடு, பாண்டிபஜார், ராமாபுரம், வடபழனி, வேளச்சேரி, உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
கடந்த 17, 18 ஆகிய இரு தேதிகளில் கொள்ளையடித்த 20 லட்ச ரூபாயை, தரமணியில் உள்ள கோடாக் வங்கியின் டெபாசிட் ஏ.டி.எம். மூலமாக அவரது தாயார் வங்கி கணக்கிற்கு அமீர் பணத்தை அனுப்பியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கைதான நபர்களிடம் இருந்து 3 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த கார்டுகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமீர், வீரேந்தர் உள்பட அரியானாவில் உள்ள அமீரின் தாயாரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வங்கி கணக்கில் எந்த பணமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. செயலி மூலமாக கொள்ளையர்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கிய உரிமையாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.