‘லவ் டுடே’ பட பாணியில் மோசடி.. “பெண் குரலில் பேசி திருமண ஆசை காட்டிய இளைஞர்” - மொபைல் ஆப் மூலம் ஏமாற்றம்!

இந்த சம்பவம், இணையவழி குற்றங்களின் புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது.
‘லவ் டுடே’ பட பாணியில் மோசடி.. “பெண் குரலில் பேசி திருமண ஆசை காட்டிய இளைஞர்” -  மொபைல் ஆப் மூலம் ஏமாற்றம்!
Published on
Updated on
2 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில், திருமண வரன் தேடி வந்த ஆண்களை குறிவைத்து, AI மற்றும் செல்போன் ஆப் உதவியுடன் நூதன முறையில் இணையவழி மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளது காவல்துறை. பெண் குரலில் பேசி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக நம்பவைத்து பணம் பறித்த இந்த மோசடி, மாநிலத்தின் பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பான விசாரணை, பெட்ரோல் பங்க் ஊழியரான அஜய் ரத்தோர் என்பவரின் புகாரைத் தொடர்ந்து தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, தனது பேங்க் அக்கவுண்ட் திடீரென முடக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில்,  அஜய் வேலையில் இருந்தபோது ஒருவர் தொலைபேசியில் அழைத்து உறவினர் ஒருவருக்கு அவரச உதவி தேவைப்படுவதாகக் கூறி ரூ.2,000 பணம் கேட்டுள்ளார். இவரும் உதவி செய்யும் நோக்கத்தில் அவர் அந்த பணத்தை UPI மூலம் அனுப்பி உள்ளார்.

அந்த ட்ரான்ஷக்க்ஷனுக்கு பிறகு அவரது வங்கிக் கணக்கு முகப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த அவர், வங்கி மற்றும் காவல்துறையினரை அணுகியுள்ளார். விசாரணையில், அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ஆன்லைன் பண மோசடி வழக்குடன் தொடர்புடையது  என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, லக்ஷ்மி நாராயண் சாஹு மற்றும் அவரது கூட்டாளியான சோனு சாஹு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

காவல்துறையின் தகவல் படி , குற்றம் சாட்டப்பட்டவர்கள் "பவித்ரா ரிஷ்தா" என்ற பெயரில் போலியான திருமண சேவை இணையதள முகவரியுடன் பிளக்ஸ் பேனர்கள் தயாரித்து, அவற்றை வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளனர். திருமண வரன் தேடி வந்த ஆண்களை தொலைபேசியில் அழைத்து, லாலா பெண் குரலில் பேசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் விவரங்கள் இருப்பதாகக் கூறி, திருமண ஏற்பாடுகளுக்காக பணம் பெற்றுள்ளனர். பணம் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்பு எண்களை முடக்கி ஏமாற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்த மோசடி நடைபெற்று வந்ததாகவும், குரலை பெண் குரலாக மாற்றும் செயலிகள், புளூடூத் சாதனங்கள் மற்றும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜாஞ்ச்கிர்-சம்பா மட்டுமின்றி, ராய்ப்பூர், கவர்தா உள்ளிட்ட மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் இவர்களுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் திருமண வரன் தேடும் நபர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எந்த திருமண சேவை நிறுவனத்தையும் நம்புவதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி திருமண ஆசையை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட இந்த சம்பவம், இணையவழி குற்றங்களின் புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com