
ஒரு லட்சம் ரூபாய் பணத்துக்காக தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய வழக்கில் கடலூரைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்த வெங்கட்ராவ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்.
இதை உண்மை என நம்பிய வெங்கட்ராவ், தனது சகோதரியின் நகையை வங்கியில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் விடுதியில் தங்கியிருந்த வேல்முருகனை சந்திக்கச் சென்றார்.
அங்கு பணத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன், வெங்கட்ராவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் போட்டு எடுத்து சென்று, பாசிக்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள கள்ளங்குத்து வெள்ளாற்றங்கரை ஓடையில் வீசியுள்ளார்.
மனித உடலின் பாகங்கள் தனித்தனியாக கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து விருதாச்சலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் காவலாளி வெங்கட் ராவை, வேல்முருகன் கொலை செய்து பாசிக்குளம் ஓடையில் வீசி சென்றது தெரியவந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், வேல்முருகன் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள்தண்டனையும், 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.