

கோவை புதூர் சி.பி.எம் கல்லூரிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான காட்டு பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதாக உள்ளூர் மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த தகவலை அடுத்து, குனியமுத்தூர் போலீஸ் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணையை தொடங்கினர். சடலமாகக் கிடைத்த பெண் உடல் அரை நிர்வாணமாக கிடந்துள்ளது.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற எந்தவொரு ‘க்ளூ’வும் போலீஸாருக்கு இன்னும் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் அந்தப் பெண்ணைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, தடையங்களை மறைப்பதற்காக கொலை செய்து விட்டு உடலை இங்கே வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த விபரீதம் அரங்கேறியதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் அருகே உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும் என காவல்துறை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை புதூர் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஒருவரின் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், மாநகரப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.