"வளர்ப்பு மகளை போய் இப்படியா?" -தொடர் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. 29 நாட்களில் கிடைத்த அதிரடி தீர்ப்பு!

மாநிலத்திலேயே மிக விரைவாக முடிக்கப்பட்ட வழக்கு இதுவாகும். 29 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
pocso case in nellei
Published on
Updated on
2 min read

நெல்லை அருகே 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு வெறும் 29 நாட்களிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 35 வயதான எலக்ட்ரீசியன் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி அவரை பிரிந்து வாழ்த்துள்ளார். முதல் கணவர் மூலம் பிறந்த மகளுடன் வாழ்ந்து வந்த அந்த பெண். திருமணம் செய்து பிறகு அந்த குழந்தையை வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொண்டுள்ளார் எலக்ட்ரீசியன். பின்னர் இவர்களுக்கு மேலும் 2 குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கணவனின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட மனைவி, அவரது செல்போனில் இருந்த ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்ட்டை போட்டு அவரின் அழைப்புகளை கேட்டுள்ளார். அப்போது தனது 11 வயது மகளிடம் அவர் ஆபாசமாக பேசியது பதிவாகியிருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து மகளிடம் பொறுமையாக விசாரித்தபோது, திடுக்கிடும் விஷயங்களை கூறியுள்ளாள் அவரின் மகள். தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றது மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட தாய் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 12-ஆம் தேதி நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த பெண். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சுதா உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், அவருக்கு எதிராக குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி சண்முகம் தலைமையில், டிஎஸ்பி தர்ஷிகா நடராஜன் மேற்பார்வையில் மகளிர் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். பின்னர், நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை விரைவாக தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 18-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, வெறும் 5 வேலை நாட்களில் 23 சாட்சிகள் முழுமையாக விசாரிக்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு 29-வது நாளில், நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் தாம் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்தார். இருப்பினும், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி கடுமையான தண்டனையை வழங்கினார். இதன்படி, சிறுமியின் வளர்ப்பு தந்தையாக இருந்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், பாலியல் சீண்டலுக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை மிரட்டியதற்காக பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தத்தில், குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையுடன் ரூ. 28 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை 18 வயது நிறைவடையும் வரை வங்கியில் டெபாசிட் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகினார். வழக்கை துரிதமாக முடிக்க உதவிய ஏடிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் சுதா, நீதிமன்ற பெண் போலீஸ் வளர்மதி உள்ளிட்டவர்களை நெல்லை மாவட்ட எஸ்பி பிரசண்ண குமார் பாராட்டினார். இந்த வழக்கு குறித்து ஏடிஎஸ்பி சண்முகம் கூறுகையில், “மாநிலத்திலேயே மிக விரைவாக முடிக்கப்பட்ட வழக்கு இதுவாகும். 29 நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெறும் 18 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 5 வேலை நாட்களில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது” என்றார். அரசு வழக்கறிஞர் உஷா கூறுகையில், “நீதிமன்ற நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி துரிதமாக செயல்பட்டோம். கடந்த 3 ஆண்டுகளில், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை நான் பார்த்ததில்லை. இந்த வழக்கே அதில் மிக விரைவாக முடிக்கப்பட்டதாகும்” என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com