
கடந்த 2017-ம் ஆண்டு போரூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதன் பின், ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் நகைக்காக அவரது தாயை அடித்து கொலை செய்தார். இந்த வழக்கில் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டார்.
சிறுமி கொலை வழக்கில், தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விதித்தது. செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தயஹு.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 8 அன்று தீர்ப்பு வழங்கியது.
வழக்கு விசாரணையில், தஷ்வந்த் தொடர்பான வழக்கில் முறையாக ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அதேபோன்று, சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் தஷ்வந்த் தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், டிஎன்ஏ (DNA) ஆய்வும் சரியானதாக ஒத்துப் போகவில்லை என தெரிவித்து, தஷ்வந்தை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புழல் சிறையில் இருந்து நேற்று மாலை 7:30 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.