“திருப்பூரில்.. வேலை தேடி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்” - ஏமாற்றி அழைத்து சென்ற மேன்பவர் ஏஜென்ட்! அதிர்ச்சி சிசிடிவி?

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று
Sexual harassment
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு பேருந்து மூலமாக வந்து  சேர்ந்துள்ளார். இவர் வேலை தேடி வேறு மாவட்டத்திற்கு வந்துள்ளதால் யாரையும் தெரியாமல், காலையில் வேலை தேடலாம் என பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டு இருந்துள்ளார். 

தனியாக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை அணுகிய இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை விசாரித்துள்ளார். இங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்ற வேலை தேடி வருவதாக தெரிவித்த அந்த பெண்ணிடம், அவரை தனியார் மேன்பவர் ஏஜென்ட் (வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு மைய பணியாளர்) என கூறிக்கொண்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார் அந்த நபர். மேலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தன்னுடன் வந்தால் இப்போதே பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன், அங்கேயே தங்கும் விடுதி உணவு அனைத்தும் வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் அவருடன் சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில், காங்கேயம் சாலை நல்லூர் வழியாக சென்றுள்ளார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார், அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்த இளம்பெண் அவரிடமிருந்து தப்பிய அங்கிருந்து ஓடி வந்து இரவு நேரத்தில் திறந்திருந்த பேக்கரி கடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற நல்லூர் போலீசார் பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது திருப்பூர் பேருந்து நிலையதில் பெண்ணிடம் தனியார் வேலைவாய்ப்பு முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என நோட்டீஸ்கள் விநியோகித்து ஏராளமான ஏஜென்ட்கள் சுற்றித் திரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.    இவர்கள் வேலை தேடி வரும் பெண்களிடம் அத்துமீறுதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் என பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் பெண்கள் இது தொடர்பாக புகார் அளிக்க பயந்து வந்துள்ளனர். இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரிடமிருந்து வேலை தேடி வந்த பெண் தப்பி ஓடி போலீசில் புகார் அளித்த சம்பவம் மூலமாக தனியார் நிறுவனங்கள் தொடர்பான முழு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருப்பூர் வந்திறங்கிய இளம் பெண்ணிடம் பேசி அவரது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து, வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூருக்கு வேலை தேடி வரும் நபர்கள் தெரிந்த நபர்கள் மூலமாகவோ அல்லது நம்பகமான நபர்கள் மூலம் வரவேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com