

ராஜஸ்தான் மாநிலத்தில், 65 வயதான மருத்துவரிடம் இருந்து சுமார் ரூ.2 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட செவிலியர் ஒருவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு வெளியிட்ட காணொளி மூலம் பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அந்த மருத்துவர் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளிடமும் அவர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த கம்லேஷ் என்ற செவிலியர், மருத்துவரின் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் சுமார் ரூ.2 கோடி பணம் பறித்ததாக மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்த பின்னர் காவல்துறையினர் அவரை பார்மர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காணொளியில் பேசிய செவிலியர், மருத்துவரை "தொடர் பாலியல் குற்றவாளி" என குறிப்பிட்டார். கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மருத்துவமனைக்கு வந்த பல பெண் நோயாளிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறினார். மேலும், சில பெண்கள் கடந்த காலங்களில் காவல்துறையில் புகார் அளித்திருந்தாலும், பணம் கொடுத்து அந்த புகார்களை மருத்துவர் முடித்து வைத்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பணம் பறிப்பு வழக்கும், மருத்துவரின் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளி கொண்டு வராமல் தடுக்க உருவாக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் பெண்களை மருத்துவரிடம் அழைத்து வருவதற்கும், அவருக்கு உதவுவதற்கும் துணைபுரிந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால், செவிலியர் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அவை தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மருத்துவர் அளித்துள்ள புகாரில் வேறு பல அதிர்ச்சி தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் 2016 டிசம்பர் மாதம் முதல் தனது தனியார் மருத்துவமனையில், பெரும்பாலும் இரவுப் பணியில் செவிலியராக பணியாற்றி வந்ததாக கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நான்காவது மாடியில் இருந்த தனது தனியறைக்குள் தேநீர் தயாரிக்கும் பெயரில் அடிக்கடி வந்த செவிலியர், ஒரு சந்தர்ப்பத்தில் தனது அனுமதியின்றி கைபேசியில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை தனது மொபைல் போனுக்கு மாற்றிக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதாகவும், தன்னை கொலை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் மிரட்டி பல ஆண்டுகளாக பணம் கேட்டு வந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட நற்பெயரும், மருத்துவமனையின் நற்பெயரும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், அவர் தொடர்ந்து பணம் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். மருத்துவரின் புகாரின்படி, சம்பளத்திற்கு அப்பாற்பட்டு செவிலியர் மொத்தமாக சுமார் ரூ.2 கோடி வரை மிரட்டிப் பணம் பெற்றுள்ளார். இதில் மருத்துவரின் தனிப்பட்ட மற்றும் மருத்துவமனை வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.35 லட்சம் ஆன்லைன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, லாக்கரில் வைத்திருந்த நிரப்படாத காசோலைகள் மற்றும் வெற்று முத்திரைத்தாள்களில் கையெழுத்திடுமாறும் தன்னை கட்டாயப்படுத்தியதாக மருத்துவர் புகாரில் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிதி பரிவர்த்தனைகள், வங்கிப் பதிவுகள் உள்ளிட்டவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், செவிலியர் தன்னை 24 மணி நேரமும் கண்காணித்து வந்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தனது நடமாட்டங்களை கண்காணித்ததுடன், தனக்கென ஒரு தனி மொபைல் போன் மற்றும் சிம் கார்டை வழங்கி, அது எப்போதும் இயக்கத்தில் இருக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, செவிலியரின் கைபேசியில் இருந்து மீட்கப்பட்ட மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் ஒத்துழைக்கவில்லை என்றும், தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணையை திசைதிருப்ப முயன்றதாகவும் பார்மர் நகர கோட்வாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்ட பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட செவிலியர் கடந்த 2020-ஆம் ஆண்டு பார்மர் பஞ்சாயத்து சமிதி தேர்தலில் ஒரு அரசியல் கட்சி சார்பில் வார்டு உறுப்பினர் வேட்பாளராக போட்டியிட்டு, வெறும் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், முன்னதாக வரதட்சணைக் கொடுமை மற்றும் தாக்குதல் தொடர்பான வழக்குகளிலும் அவர் தொடர்புடையவராக இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் 2010-ஆம் ஆண்டு செவிலியர் படிப்பை முடித்து, 2016-ஆம் ஆண்டு முதல் மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் இரண்டு தனித்தனி சட்டப் பரிமாணங்களை எடுத்துள்ளது. ஒரு புறம் மருத்துவர் அளித்த மிரட்டிப் பணம் பறிப்பு, குற்றவியல் அச்சுறுத்தல் மற்றும் பணம் வசூல் தொடர்பான புகாரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மறுபுறம், மருத்துவர் மீது செவிலியர் முன்வைத்துள்ள 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.