

ஒரு சாதாரண நடைப்பயணம், சில நிமிடங்களில் உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான போராட்டமாக மாறியது. வானிலிருந்து தாக்கிய மின்னல் காதலர்கள் இருவரையும் நிலைகுலையச் செய்தது. உதவி கிடைக்குமா என்ற நிச்சயமற்ற சூழலில், தானும் மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்தபோதும், காதலனின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெண் போராடினார். ஒருமுறை அல்ல, இரண்டு முறை இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை (CPR) அளித்து அவரை உயிர் பிழைக்க உதவினார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்போது காதலனின் உயிரைக் காப்பாற்றிய பெண்ணுக்கு வீரத்திற்கான விருது வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக், ஈவா ப்ரோடெரிக் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி, நிக் தனது காதலி ஈவாவுடன் சுமார் 10 மைல் தூர நடைப்பயணத்துக்குச் சென்றார். அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள கெட்டில் மொரைன் வனப்பகுதியில் அவர்கள் பயணம் மேற்கொண்டனர். தொடக்கத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற பயணம், திடீரென பெய்த கனமழையால் ஆபத்தானதாக மாறியது.
அப்போது அவர்கள் தங்களது காரிலிருந்து இரண்டு மைல்களுக்கு மேல் தொலைவில் இருந்தனர். மழை தொடர்ந்து வலுத்தது. இடியோசையும் அதிகரித்ததால் ஈவாவுக்கு அச்சம் ஏற்பட்டது. மழையிலிருந்து பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு ஏற்ற இடமும் அருகில் இல்லை. இருவரும் தொடர்ந்து நடந்து சென்றுகொண்டிருந்தனர். மின்னல் தாக்கக்கூடும் என்ற அச்சத்தை ஈவா நிக்கிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சில நிமிடங்களிலேயே அவர்கள் அஞ்சியதுபோன்ற விபரீதம் நிகழ்ந்தது.
அவர்களுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் மின்னல் தாக்கியது. அதன் மின்சாரம் தரை வழியாகப் பரவியதால் இருவரும் பாதிக்கப்பட்டனர். நிக்கிற்கு அந்தச் சம்பவத்தின்போது கேட்ட பலத்த சத்தம் மட்டுமே கடைசியாக நினைவில் இருந்தது. ஈவாவும் மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பிறகு சுயநினைவுடன் இருந்த அவர் அருகில் கிடந்த நிக்கைப் பார்த்தார். அவரது முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கண்கள் பாதி திறந்த நிலையில் இருந்தன. அவர் சுவாசிக்கவில்லை என்பதையும் ஈவா உணர்ந்தார்.
அந்த நிமிடத்தில் பதற்றத்துக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. உடனடியாக அவசர உதவிக்கான 911 எண்ணைத் தொடர்புகொண்டார். அதே நேரத்தில் நிக்கின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கினார். அவசர உதவியைத் தொடர்புகொண்டாலும், அவர்களைக் கண்டுபிடிப்பதில் மீட்புக் குழுவினருக்குச் சிரமம் ஏற்பட்டது. வனப்பகுதியில் கைப்பேசி சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை. தாங்கள் எந்தப் பாதையில் வந்தார்கள், வனப்பகுதிக்குள் எங்கிருக்கிறார்கள் என்பதையும் தெளிவாகக் கூற முடியவில்லை.
இதனால் மீட்புக் குழுவினர் பல பாதைகளில் தேட வேண்டியிருந்தது. வனப்பகுதிக்குள் வாகனத்தில் செல்ல முடியாததால், அவர்கள் நடந்தே சம்பவ இடத்தை அடைய வேண்டியிருந்தது. உதவிக்குழுவினர் வந்து சேர சுமார் 50 நிமிடங்கள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரம் முழுவதும் ஈவா நிக்கின் உயிரைக் காப்பாற்ற முயன்றார். இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் நின்றுவிடும் நிலையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் CPR சிகிச்சையை அவர் மேற்கொண்டார். நிக்கிற்கு இரண்டு முறை இந்தச் சிகிச்சையை அளித்து அவரை மீண்டும் உயிர்ப்பிக்க உதவினார்.
தானும் மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், காதலனின் உயிரைக் காப்பாற்ற ஈவா காட்டிய மன உறுதி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மீட்புக் குழுவினர் வந்ததும் நிக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்பினார். மின்னல் தாக்குதலின் பாதிப்பாக ஒரு காதில் கேட்கும் திறன் குறைந்ததுடன், தசைநார் தொடர்பான சில பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட்டன.
இந்தச் சம்பவம் அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு நிக், ஈவாவிடம் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த விபத்து நடந்த ஆகஸ்ட் மாதத்தை இனிமையான நினைவுகளுடன் மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காகவே அந்த மாதத்தில் திருமணம் செய்துகொண்டதாக நிக் தெரிவித்துள்ளார். ஈவாவும் நகைச்சுவையாக, நிக்கின் உயிரைத் தாம் காப்பாற்றிவிட்டதால் இனி அவர் தன்னை விட்டுப் போக முடியாது என்ற கருத்தில் பேசியுள்ளார்.
நிக்கின் உயிரைக் காப்பாற்றிய ஈவாவின் துணிச்சலைப் பாராட்டும் வகையில், பால்மைரா தீயணைப்புத் துறை அவருக்கு ‘லைஃப்சேவர்ஸ்’ விருது வழங்கவுள்ளது. ஆபத்தான சூழலில் தானும் பாதிக்கப்பட்டிருந்தபோதும் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிக்கான அங்கீகாரமாக இந்த விருது அமைகிறது. மின்னல் தாக்குதல் போன்ற இயற்கைச் சம்பவங்களை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், அவசரநேரத்தில் மன உறுதியுடன் செயல்படுவதும், உயிர்காக்கும் முதலுதவி பற்றிய அறிவைப் பெற்றிருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட இருவரும் இன்று கணவன், மனைவியாக இணைந்திருப்பது அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத திருப்பமாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.