ஆந்திராவில் சொத்தில் பங்கு கேட்ட அக்கா... விரட்டி விரட்டி வெட்டிய தம்பி...

ஆந்திராவில் உடன் பிறந்த சகோதரியை இளைஞர் ஒருவர் கோடாரியால் விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ரத்தம் என்ற வார்த்தை ரத்த வெறியாக மாறிய காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....
ஆந்திராவில் சொத்தில் பங்கு கேட்ட அக்கா... விரட்டி விரட்டி வெட்டிய தம்பி...
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பெனகச்சரல்லா கிராத்தைச் சேர்ந்தவர் ஜிலானி. இவரது பூர்வீக சொத்தாக வீட்டுமனை ஒன்று உண்டு.

இந்நிலையில் தந்தையின் பெயரில் இருந்த வீட்டுமனையின் மீது ஜிலானியின் சகோதரியான மூத்தாக்கா மகபூபி என்பவர் உரிமை கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கு ஜிலானி, எக்காரணத்தைக் கொண்டும் சொத்தில் ஒரு பைசா கூட கிடையாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இந்நிலையில் ஜூலை 9-ம் தேதியன்று தனது தம்பியைத் தேடிச் சென்ற மகபூபி, தந்தை சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜிலானி வீட்டில் விறகு வெட்டுவதற்கு கிடந்த கோடாரியை எடுத்து உடன் பிறந்தவர் என்றும் பாராமல் மகபூபியை சரமாரியாக வெட்டுவதற்கு பாய்ந்தார்.

தனது தம்பியின் ஆக்ரோஷத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போன பெண்மணி, தடுக்க முயற்சித்தபோதும், கை, கால் மற்றும் இடுப்பு பகுதியில் கோடாரி வெட்டு விழுந்தது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தடுத்து படுகாயமடைந்த மகபூபியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மகபூபி அளித்த புகாரின் அடிப்பைடயில் வழக்குப்பதிவு செய்த அனந்தபூர் போலீசார் ஜிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பார்கள்... ஒரே வயிற்றில் பிறந்தபோதும், சொத்து என்றவுடன், சகோதரியை விரட்டி விரட்டி வெட்டிய பாசக்கார தம்பியின் இந்த செயல் காண்போரை பதறச் செய்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com