"நம்பி வீட்டிற்குள் விட்டா இப்படியா?” - 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காவின் வருங்கால கணவர்.. அதிர்ச்சி சம்பவம்?

காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே எலி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சியில்
sexually harasses a 17-year-old girl
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே வசித்து வந்த சபரி என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது அக்காவிற்கு பார்த்திருந்த மாப்பிள்ளை சதாசிவம், தன்னிடம் செல்போன் மூலம் தவறான முறையில் பேசியதுடன் பாலியல் தொந்தரவும் அளித்ததாக சிறுமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்திருந்த சிறுமி, காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே எலி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது சிறுமியுடன் அவரது காதலன் சபரியும் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, “கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நானும் விஷம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அந்த சிறுமி தொலைபேசியில் ‘நான் விஷம் அருந்திவிட்டேன்’ என்று கூறியதால் உடனே வந்து பார்த்தேன்,” என்று தெரிவித்துள்ளார். தற்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் நலமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் கௌதம் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறுமி காவல் நிலையத்தில் விஷம் அருந்தவில்லை. காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே விஷம் அருந்திய நிலையில் வந்திருந்தார். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை மீது புகார் அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனடியாக காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். காவல் நிலையத்தில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது அக்காவை திருமணம் செய்து கொள்ள இருந்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் சதாசிவம், செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு அளித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சதாசிவம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்துள்ள சதாசிவம் தற்போது பெயிண்டராக வேலை செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com