"மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லை" சிவாஜி கிருஷ்ணமூா்த்தி ஜாமின் மனுவில் நீதிபதி சாடல் !

"மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லை" சிவாஜி கிருஷ்ணமூா்த்தி ஜாமின் மனுவில் நீதிபதி சாடல் !
Published on
Updated on
1 min read

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி அல்லி "மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லை"  என சாடியுள்ளார்.

ஜூன் 16ம் தேதி கொடுங்கையூரில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோவை தான் பார்த்ததாக கூறிய நீதிபதி, அதை முழுமையாக பார்த்துவிட்டு வரும்படி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

மனுதாரர் 65 வயதான மூத்த குடிமகன் என்பதால் அவருடைய வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 
ஒரு மூத்த குடிமகன் இவ்வாறு பேசலாமா என்றும், மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறி, வழக்கின் விசாரணையை நாளை  (ஜூன் 30) நீதிபதி தள்ளிவைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com