

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்துள்ள வேளாரேந்தல் விளக்கு பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் 41 வயதான சற்குணம். இவர் தினந்தோறும் இரவு கடையை முடித்துவிட்டு மறுநாள் டீக்கடைக்கான தேவையான பொருட்களை இரவில் மறவமங்கலம் கிராமத்திற்கு சென்று வாங்கி கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வேளாரேந்தல் விளக்கிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல நேற்று இரவு வழக்கம் போல் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு வேளாரேந்தல் விளக்கு அருகே உள்ள சந்தைக்கடை பகுதிக்கு வந்திருக்கிறார்.
அப்போது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சற்குணத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட சற்குணம் தனது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றபோது விரட்டி சென்ற நபர்கள் வயல்வெளிக்குள் வைத்து அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். கடைக்கு சென்ற சற்குணம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்திருக்கின்றனர்.
நிலத்தில் சற்குணத்தின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார் ? என வழுக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையோடு சேர்த்து இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதோடு மீண்டும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.