2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; போலீசார் விசாரணை!
நாட்றம்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் மற்றும் 2 டன் ரேஷன் அரிசியை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சின்ன மோட்டூர் கிராமத்தில் இருந்து பச்சூர் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொது விநியோக திட்ட அரிசி கடத்தப்படுவதாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் பெயரில் நேற்று இரவு வட்டாச்சியர் குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் சொரக்காயல்நத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது வேன் மூலமாக ரேஷன் அரிசி கடத்தி வந்துள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு ஓட்டுனர் ரேஷன் அரிசி கடத்தி வந்த வேனை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக வேனை பரிசோதனை செய்ததில் வேனில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. பின்னர் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து பச்சூர் தமிழ்நாடு வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.