

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய முதியவர் விஸ்வநாதன். இவருக்கு ராஜசேகர் என்ற ஒரு மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே விஸ்வநாதன் தனது மகன் ராஜசேகருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை எழுதி கொடுத்துள்ளார். அதுவரை தந்தையை பராமரித்து வந்த ராஜசேகர் வீட்டை தன் பெயருக்கு மாற்றிக்கொண்டதும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.
மேலும் அவருக்கு முறையாக உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறுமாறு தொல்லை செய்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரை அணுகி அந்த வீட்டை மீண்டும் தனது பெயருக்கு மாற்ற மனு அளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர் “வீட்டை எழுதி கேட்கிறாயா” என்ற ஆத்திரத்தில் தந்தை விஸ்வநாதனிடம் ஒன்னக்கரசம் பாளையத்தில் வைத்து தகராறு செய்து அவரை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து விஸ்வநாதன் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதிக்கு மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த விஸ்வநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் தந்தையை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மகன் ராஜசேகரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ராஜசேகரன் அவரது தந்தையை கல்லை போட்டு கொலை செய்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.