

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷ்யாம்பிகாரி. இவர் அதே பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி கணேஷ் என்ற பெயரில் சிறிய அளவில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் இவரது கடையில் பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் ஷ்யாம்பிகாரி கடைக்கு அப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் பொருட்களை வாங்க வந்திருக்கிறார்.
அப்போது ஒரு லிட்டர் அளவுள்ள சமையல் எண்ணெய் பாக்கெட் வாங்கிவிட்டு அதற்கு 500 ரூபாய் குடுத்து மீதி தொகையை கேட்டிருக்கிறார். கடையில் இருந்த ஷ்யாம்பிகாரி “ 500 ரூபாய்க்கு என்னிடம் சில்லறை இல்லை GPAY வில் அனுப்புகிறேன் இல்லை என்றால் நீங்கள் எண்ணெய் பாக்கெட்டிற்கான பணத்தை GPAY வில் அனுப்புங்கள்” என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் எண்ணெய் பாக்கெட்டை ஷியாம்மீது தூக்கி வீசி அநாகரிகமான வார்த்தைகளால் மிரட்டி உள்ளார்.
எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில் ஆறுமுகம் குரல் கேட்டு வந்த ஆறுமுகம் ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் சிலர் ஷியாம்பிகாரியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளனர். மேலும் கை காலை உடைத்து விடுவேன் என அவரது மகனையும் மிரட்டி உள்ளனர். இதனை அருகில் இருந்து பார்த்த கணேஷ் என்பவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
ஆறுமுகம் ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக துணை செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் ஷ்யாம்பிகாரியிடம் “நான் நெனச்ச உன்னையும் உன் கடையையும் காலி பண்ணிடுவேன்” என தனது பதவியை கூறி மிரட்டி இருக்கிறார். எனவே இது குறித்து ஷ்யாம்பிகாரி தனக்கும் தனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆறுமுகம் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். மளிகை கடையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.