காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ஊராட்சிக்குட்பட்ட ராம்ஜி தெருவில் வசித்து வந்தவர் 50 வயதுடைய சத்யா. இவரது மனைவி நாகம்மாள். இந்த தம்பதிக்கு சந்துரு, முனுசாமி, சதீஷ் என மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சத்யாவின் இரண்டாவது மகன் 25 வயதுடைய முனுசாமி, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கித் தர வேண்டும் அல்லது இடம் வாங்க பணம் வழங்க வேண்டும் எனக் கூறி, கடந்த சில மாதங்களாக தனது தந்தை சத்யாவிடம் முனுசாமி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று மது மற்றும் கஞ்சா போதையில் மினி சரக்கு வாகனத்தில் ராம்ஜி நகருக்கு சென்ற முனுசாமி, மீண்டும் தனது தந்தை சத்யாவிடம் வீடு கட்டுவதற்கு இடம் அல்லது பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி, மினி சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு தனது தம்பி சதீஷ் மீது மோதுவதற்காக வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சத்யா, தனது மகனை காப்பாற்றுவதற்காக சதீஷை தள்ளிவிட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மினி சரக்கு வாகனம் சத்யா மீது மோதியதுடன், அவரை சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் சத்யாவின் கை, கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிருக்கு போராடிய சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை மீது மினி சரக்கு வாகனத்தை ஏற்றிவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்றதாக கூறப்படும் முனுசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு கட்ட இடம் அல்லது பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில், போதையில் மகன் ஓட்டிய மினி சரக்கு வாகனம் ஏறி தந்தை உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்