27 முறை கத்தியால் குத்தி கொலை! காதலிக்க மறுப்பு.. திருமணமான ஆசிரியைக்கு பள்ளியிலேயே நேர்ந்த கொடூரம்?

காலை வழக்கம்போல் பள்ளியில் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது..
faridabd teacher murder
Published on
Updated on
2 min read

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவரை பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயதான இளைஞர், இந்தக் கொலையை இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, அதற்காக கூர்மையான கத்தியை வாங்கியிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதான சந்தியா ஷர்மா. அவர் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். திங்கள் கிழமை காலை வழக்கம்போல் பள்ளியில் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, அமித் என்ற இளைஞர் பள்ளிக்குள் நுழைந்துள்ளார்.

காவல்துறையின் தகவலின்படி, சந்தியா ஷர்மாவின் கணவர் அழைக்கிறார் என்று கூறி, அவரை வகுப்பறையிலிருந்து வெளியே வரவழைத்துள்ளார். வெளியே வந்தவுடன், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்த அமித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். 27-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி தாக்கப்பட்ட ஆசிரியை சந்தியா ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொடூரத் தாக்குதல் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது. இந்த கத்தி குத்து தாக்குதலைத் தடுக்க முயன்ற பள்ளி ஊழியர் ஒருவரையும் குற்றச்சாட்டப்பட்ட அமித் மிரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் கோட் கிராமத்தைச் சேர்ந்த அமித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தியா ஷர்மா மீது தனக்கு காதல் உணர்வு இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்றும் அமித் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அவர் மீது சந்தியா பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். அதன்பிறகு மன்னிப்பு கேட்ட அமித்திடம் இருந்து விலகுவதற்காக, சந்தியா தனது பள்ளியையும் வசிப்பிடத்தையும் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அமித், இரண்டு மாதங்களுக்கு முன்பே சந்தியாவைக் கொலை செய்ய முடிவு செய்து, அதற்காக புதிய கத்தி ஒன்றை வாங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் பள்ளிக்குச் செல்லும் வழியிலோ அல்லது வீடு திரும்பும் நேரத்திலோ தாக்க திட்டமிட்டதாகவும், அப்போது பிடிபட வாய்ப்பு இருப்பதாக கருதி அந்தத் திட்டத்தை கைவிட்டுள்ளார். பின்னர் நேரடியாக பள்ளிக்குள் சென்று தாக்க முடிவு செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

"தாக்குதலின் போது கத்தி வளைந்து போன பிறகும், மிகுந்த ஆத்திரத்தில் தொடர்ந்து குத்திக்கொண்டே இருந்தார்," என்று வழக்கை விசாரிக்கும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, அமித் பயன்படுத்திய பைக் மற்றும் சம்பவத்தின் போது அணிந்திருந்த ஆடைகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியை சந்தியா ஷர்மாவின் கணவர் விக்கி குர்ஜார், தனது மனைவி முன்பு பணியாற்றிய பள்ளியில்தான் அமித்தை முதன்முதலாக சந்தித்ததாகக் கூறினார். பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டபோதே காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்க முடியும் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். "அப்போது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனைவி இன்று உயிருடன் இருந்திருப்பார்," என்று அவர் கூறினார். பெரோஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி குர்ஜாரும், டபுவா பகுதியைச் சேர்ந்த சந்தியா ஷர்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு 7 வயது மகனும், 5 வயது மகளும் உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட அமித், மூன்று சகோதரர்களில் இளையவர். அவரது இரு சகோதரர்களும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். அமித்துக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை என்றும், எருமைகளை வளர்த்து பால் விற்பனை செய்து வாழ்ந்து வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலைக்கான அனைத்து சூழ்நிலைகளையும், முந்தைய புகார் தொடர்பான நடவடிக்கைகளையும் காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com