

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனிநபர் நடத்தி வந்த பழங்கால பொருட்கள் வைத்திருந்த அருங்காட்சியகத்தின் மேற்கூரையை பிரித்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை சிலைகள், கலைப்பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்த புகாரில் தற்போது 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர், இடலாக்குடி தெருவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில், நினைவு அருங்காட்சியகம் ஒன்று நடத்தி வருகிறார். இதில் பழங்கால பொருட்களை சேகரித்து காட்சிக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அருங்காட்சியகத்துக்கு முகமது அலி வந்த போது உள்ளே இருந்த பழங்கால பித்தளை மற்றும் கலை பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அருங்காட்சியகத்தின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டு இருந்தது. எனவே மேற்கூரையை பிரித்து மர்ம நபர் உள்ளே நுழைந்து பொருட்களை திருடி இருக்கலாம் என கருதிய முகமது அலி உள்ளே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது பெண்கள் மூவர் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பொருட்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து முகமது அலி, கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மூன்று பெண்களை கைது செய்தனர். விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த பகவதி (28), நாகர்கோவில் ஓழுகினசேரி பகுதியை சேர்ந்த நந்தினி (22), அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (24) ஆகிய மூவரை கோட்டார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்