“நீட் தேர்வால் பறிப்போன மீண்டும் ஒரு உயிர்” - வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மாணவி தற்கொலை.. சேலம் எடப்பாடியில் பரபரப்பு!

பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது..
neet student suicide
neet student suicide
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் கிராமத்தில் சேகர் புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் இரண்டாவது மகளான 20 வயதுடைய கோபிகா நீட் தேர்வுக்காக தொடர்ந்து இரண்டு ஆண்டுகால முயற்சி செய்து வந்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்த இவர் அதே ஆண்டு நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைதிருக்கிறார். இருப்பினும் சோர்வடையாத கோபிகா, மீண்டும் தீவிரமாக படித்து இந்த 2026 ஆம் ஆண்டில் தேர்வை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு நடந்த தேர்வில் வினாத்தாள்கள் கசிந்து தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் நாளை நடத்தப்படவிருக்கும் சூழ்நிலையில் தேர்வு மாணவிக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் இந்த ஆண்டு எழுதியது வீணானதால் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை உருவானது மாணவிக்கு மிகுந்த மன அழுத்ததை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கோபிகா மிகுந்த விரக்தியில் இருந்ததாகவும், தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Admin

இதற்கிடையில், அவர் வாழப்பாடியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். இந்த சூழலில், வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று தனியாக இருந்த கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். பின்னர் கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொங்கணாபுரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கோபிகா நீட் தேர்வு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதுவே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் வெள்ளாளபுரம் கிராமத்திலும், சேலம் மாவட்டத்திலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com