
திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில் மர்மமான முறையில் பள்ளியில் இருக்கும் பூட்டப்பட்டிருந்த கிணற்றில் மிதந்து இருந்த உடலால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் தேதி காலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து முகிலன் வீட்டிற்கு வந்ததாரா என கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் "என் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தான் படித்து வருகிறான் அப்படி இருக்க எப்படி உங்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு வருவான்" என கேள்வி எழுப்பினார் அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் மகன் மாயம் என கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் அதே பள்ளியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாணவன் முகிலனின் உடலை தீயணைப்புத் துறையினர் துணையுடன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் இறந்த மகனின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.
மேலும் பள்ளியில் உள்ள கிணற்றின் முகப்பு இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு அந்த கிணற்றில் விழுந்தார் என பெற்றோர்கள் கேள்வியும் எழுப்புகின்றனர்.
மேலும் “என் மகன் இரண்டு நாட்களாக தேடி வந்தீர்கள்.. பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டான் என்று கூறினீர்களே தற்போது உயிரிழந்து கிடக்கிறான் இதற்கு என்ன பதில் சொல்லுவீங்க” என பெற்றோர் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை மகன் போன இடத்திற்கே சென்று விடுவதாக கூறி கிணற்றில் குதிக்கவும் முயற்சி செய்தார். இந்தச் சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது.
அதன்பின் மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது அங்கு இருந்த முகிலனின் அக்கா டி.எஸ்.பி சௌமியாவிடம் இரண்டு நாட்களாக என் தம்பியை கண்டுபிடித்து கொடுத்து விடுவீர்கள் என நம்பிக்கையோடு நாங்கள் பள்ளியில் தானே இருந்தோம். எதற்காக நேற்று மாலை எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தீங்க என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு டிஎஸ்பி சௌமியா “இரண்டு நாட்களாக யாரும் சாப்பிடாமல் தூங்காமல் இருந்தீர்கள், அதற்காகத்தான் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்” என சமாதானம் செய்தார். மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மாணவன் இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் எனவும் கூறினார்.
இதன் காரணமாக மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், 2 டிஎஸ்பிக்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்