

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்த ஆகாஷ் (26), என்பவருக்கும் அருகில் உள்ள புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஒரே பள்ளியில், படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். பலவருட காதலுக்கு பின் 2 வருடங்களுக்கு முன் தான் திருமணம் முடிந்துள்ளது. இருவருக்கும் குழந்தை இல்லை, ஆனாலும் சந்தோசமாக குடும்பம் நடத்திவந்துள்ளனர். ஆகாஷின் குடும்பமும் மருமகள் மோனிகாவை நல்ல முறையில் நடத்தி வந்துள்ளனர்.
ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். மோனிகா வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் தான் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருவதால் இரவில் வீட்டில் தூங்க முடியவில்லை என கூறி மோனிகா தன் கணவர் ஆகாஷிடம் வீட்டிற்கு AC வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆகாஷ் இப்போது முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஆகாஷ், அவரின் தம்பி மற்றும் பெற்றோர் ஆகிய நான்கு பேரும் புழுக்கத்தால் இரவில் வீட்டிற்குள் உறங்க முடியவில்லை என்று மாடிக்கு சென்று அங்கு உறங்கியுள்ளனர்.
ஆகாஷின் மனைவி மோனிகா மட்டும் வீட்டிற்குள் தனியா உறங்கி இருக்கிறார். காலையில் விடிந்து படுக்கை அறைக்குள் வந்த ஆகாஷ், தனது மனைவி மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார் மோனிகாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆன நிலையில் இந்த தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா எனும் கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் இந்த தற்கொலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்