பள்ளிக்கு அருகே தார் ஆலை… மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 62 மாணவர்கள்!

மாணவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புக்கு பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் தார் கலவை ஆலை காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு அருகே தார் ஆலை… மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 62 மாணவர்கள்!
Published on: 
Updated on: 
2 min read

பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மாணவர்கள் பலருக்கு மூச்சுத்திணறல், குமட்டல், உடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பல மாணவர்கள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பள்ளி நிர்வாகம் உடனடியாக அவசர உதவியை நாடியது. இதையடுத்து சுமார் 8 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 62 மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளிக்கு அருகே செயல்பட்டு வந்த தார் கலவை ஆலையில் இருந்து வெளியான மாசுதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டியம் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தொடக்க வகுப்பு மாணவர்கள் முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் என பலருக்கும் புதன்கிழமை திடீரென உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சில மாணவர்கள் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும், சிலர் குமட்டல் மற்றும் உடல் அரிப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதை உணர்ந்த ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். சுமார் 8 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் விரைந்து சென்றனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புக்கு பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் தார் கலவை ஆலை காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆலை செயல்படும்போது வெளியேறும் புகை மற்றும் மாசு காரணமாக ஏற்கெனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அந்த ஆலையின் செயல்பாட்டை நிறுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, அதன் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியதாகவும், அது மீண்டும் இயங்கத் தொடங்கிய பின்னரே மாணவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளிக்கு அருகே ஆலை செயல்படுவதால் குழந்தைகளின் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகப் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி, மாணவர்களில் பலருக்கு குமட்டல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில், எந்தக் குழந்தைக்கும் பெரிய அளவிலான உடல்நலப் பாதிப்பு இல்லை என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது சீராக இருப்பதாகவும் அவர் கூறினார். சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அந்த தார் கலவை ஆலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வராததைக் கண்டித்து சில அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு ஆணைய உறுப்பினர் வி. கீதா உத்தரவிட்டுள்ளார். ஒரு பள்ளியில் படிக்கும் இத்தனை மாணவர்கள் ஒரே நேரத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு அருகே செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளால் குழந்தைகளின் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மாணவர்களின் உடல்நலப் பாதிப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்