
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலானுர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் மகன் சக்திவேல். சக்தி வேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 அருணா தேவி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சக்திவேல் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடை மற்றும் வியாபார பரிவர்த்தனைகள் அனைத்தும் சக்திவேல் தனது மனைவியான அருணா தேவியின் பெயரில் தான் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சக்திவேல் அதிகப்படியான பணத்தை இழந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே அருணா தேவி தற்போது தனது 3 வயது குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் சக்திவேலின் கடையையும் அருணா கவனித்து வந்துள்ளார். தனது மகனின் மரணத்திற்கு அருணா தான் காரணம் என நினைத்து காமராஜ் அருணாவின் மீது கோபத்தில் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது மகனின் சொத்துக்கள் அனைத்தும் அருணாவின் பெயரில் இருந்தது காமராஜுக்கு மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.
எனவே காமராஜ் அடிக்கடி கடைக்கு சென்று அருணாவிடம் வாக்குவாதம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் காமராஜ். அதே போல நேற்று கடைக்கு சென்ற காமராஜ் அருணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருணாவை வெட்டியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருணாவை காப்பாற்ற நினைத்து கடைக்கு அருகில் சென்றுள்ளனர். ஆனால் காமராஜ் கையில் அரிவாள் வைத்திருந்ததால் அனைவரும் சற்று தூரத்தில் நின்று போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் கட்டைகளை வைத்து காமராஜ் கையில் இருந்த அரிவாளை பறித்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருணானவை மீட்டு தங்களது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த காமராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைவீதியில் உள்ள கடையில் ஒருவர் அரிவாளால் பெண்ணை வெட்டியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.