

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொலைபேசியை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை காவல்துறை உயர் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு பேசி தொடங்கியுள்ளார். மேலும் அந்த மர்ம நபர் இந்த பெண்மணியிடம், “உங்களது பெயரில் உள்ள சிம்கார்டு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு மறுத்த அந்த பெண் “சார் நான் அப்படி எதுவும் செய்யல, எனக்கு எதுவும் தெரியாது” என பதற்றத்துடன் பேசி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அந்த நபர் “இது குறித்து விசாரணை நடந்து வருகிறது உங்களை நிரபராதி என நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும்” என்று மிரட்டும் விதத்தில் பேசியுள்ளார். மேலும் இது பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது, 24 மணி நேரமும் நீங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறீர்கள் என்றும் எச்சரித்துள்ளார். இந்த விசாரணை முடிந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் உங்கள் அக்கவுண்டிற்கு நீங்க அனுப்பிய பணம் திருப்பி அனுப்பி வைக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், அவர்கள் கொடுத்த வாங்கி கணக்கிற்கு 9 லட்சத்தை தனது வாங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்துள்ளார். 9 லட்சம் பணத்தை அனுப்பிய உடனே எதிர் முனையில் பேசிய அந்த நபர் தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். பணம் அனுப்பியவர் மீண்டும் அழைத்து விளக்கம் கேட்கலாம் என அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண்ணுக்கு எந்த அழைப்பும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தேசிய சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யுமாறு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட விசாரணை தொடங்கியது. சார்பு ஆய்வாளர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் மர்ம நபர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண், பணம் பரிமாற்றம் நடந்த வங்கி கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பெண்ணிடம் பணத்தை ஏமாற்றியது பெங்களூரு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பர்தீன் அப்பாஸ் (20) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்ட திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் பெண்ணிடம் ஏமாற்றிய ஒன்பது லட்சத்தில் ரூபாய் 7 லட்சம் மீட்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், இதுபோன்று டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம நபர்கள் மிரட்டினால் உடனடியாக தேசிய சைபர் கிரைம் அல்லது 1930 என்ற அவசர எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் இது போன்ற அழைப்புகளை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்