ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, பேன்சி கடையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தியுவிட்டு தப்பிச்சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதுடைய அஞ்சு. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பதால் வருத்தமடைந்த அஞ்சு கடந்த சில மாதங்களாக கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
எனவே அஞ்சு, தாளவாடி-ஓசூர் சாலையில் உள்ள தனியார் பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம் போல் அவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நாகேந்திரன் என்பவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சுவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அஞ்சு படுகாயமடைந்து வலியால் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற நாகேந்திரன், சிறிது நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரையும் மீட்ட பொதுமக்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த அஞ்சுவுக்கும், விஷம் குடித்த நாகேந்திரனுக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாளவாடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அஞ்சுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் நாகேந்திரனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அஞ்சு நாகேந்திரனை தவிர்த்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் பேன்சி கடைக்குச் சென்று அஞ்சுவை கத்தியால் குத்தியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்திற்கான முழுமையான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேன்சி கடைக்குள் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்ததும், தப்பிச்சென்ற இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்