

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், பெண் ஒருவரும் அவரது கணவரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை குறித்து, அப்பெண் வீட்டு உரிமையாளருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் (Voice Message) மூலம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுவது வழக்கை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் அழுகிய நிலையில் இருந்த சடலம் திங்கள்கிழமை காலை மீட்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக அந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வாடகை இருப்பவரை தொடர்புகொள்ள முயன்றார். அப்போது, அவரது மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்யில், தனது காதலன் தன்னை நீண்ட நாட்களாகத் துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் தனது கணவருடன் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் உடனடியாக மன்பாடா காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மிகவும் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் தங்களது செயலுக்கான தடயங்களை அழிக்க முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகம் வராமல் இருக்க கழிவறை குழாயை திறந்துவிட்டதோடு, சுற்றுப்புறத்தில் தொடர்ந்து சத்தம் எழும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் கொலை நடந்த நேரம் மற்றும் சூழ்நிலையை மறைக்க முயன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட கணவன்-மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மன்பாடா போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 103-வது பிரிவு (கொலை) கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வாய்ஸ் மெசேஜ்யின் உண்மைத்தன்மை, கொலைக்கான பின்னணி மற்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.