மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை !! உயிரிழப்பதற்கு முன் பேசிய ஆடியோவால் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளி வளாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது குறித்து சமூகவலைதளத்தில் பரவிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடியில் இருந்து குதித்து  போலீஸ்காரர் தற்கொலை !!  உயிரிழப்பதற்கு முன் பேசிய ஆடியோவால் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு
Published on
Updated on
1 min read

புதுச்சேரி கோரிமேடு பூத்துறை சாலை அரிநமோ நகரை சேர்ந்தவர் அரிதாஷ். இவரது மகன் மகேஷ்குமார் காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஹரி என்ற ஒரு மகன் உள்ளான். 

காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்ததில் இருந்து வந்த நிலையில்  மகேஷ்குமார் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் வருகிற 19-ந் தேதியன்று  காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அதற்கான ஏற்பாடுகளில் மகேஷ்குமார் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி  பொங்கல் பண்டிகையன்று கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு மகேஷ்குமார் பணிக்கு வந்தார். ஆனால் பணிக்கு  வந்த சிறிது நேரத்தில் பயிற்சி பள்ளியின் மாடிக்குச் சென்ற அவர், கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். அதில்   மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்த மகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சுபம்கோஷ், செல்வம், தீபிகா மற்றும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் அங்கு சென்று  உடனடியாக உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோரிமேடு போலீசார் பணி சுமை காரணமாக  மாடியில் இருந்து குதித்து மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மகேஷ்குமாருக்கு பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தன்னை விடுவிக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மகேஷ்குமார் இந்த விபரீத முடிவை எடுத்தார் என பேசி பரவி வரும்  பரவலான ஆடியோ காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com