கோவை மாவட்டம் ஒண்டிபுதூரை அடுத்த நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி மற்றும் ஷிவானி என்கிற 2 பெண் குழந்தைகளும் உண்டு.
உள்ளூரில் பெயிண்டர் வேலைக்கு செல்லும் தங்கராஜ், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதைக்கு அடிமையான இவர், வீட்டில் நாள்தோறும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் புஷ்பா. ஆனால் மனைவியிடம் இருந்த 100, 200 ரூபாயைக் கூட விட்டு வைக்காமல் பறித்துக் கொண்டு மது அருந்தி, வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் ஜூலை 8-ம் தேதியன்று காலையில் புஷ்பாவும், அவரது 9 வயது மற்றும் 3 வயது குழந்தைகளும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாக அப்பகுதியில் தகவல்கள் பரவியது.
இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று பார்த்தபோது, அதில் புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் கிடந்தன.
இதனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
இதில் மனைவி, குழந்தைகள் உயிரிழந்த நிலையிலும், காலையிலேயே மது அருந்திய தங்கராஜ், தள்ளாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், முந்தைய நாள் இரவில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வந்த ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறினார்.
இதன் காரணமாக விரக்தியடைந்த புஷ்பா, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்து விலகி, மதுவுக்கு அடிமையானவரால் இளம்பெண், தன் பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த இந்த சம்பவம் ஒண்டிப்புதூர் பகுதி மக்களை ஓலமிடச் செய்துள்ளது.