

எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரில் கோழிப்பண்ணையில் அக்கா கணவரை கொன்று புதைத்த மைத்துனர்கள்-மைத்துனர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காவல் நிலையம் எதிரில், அக்கா கணவரை மைத்துனர்களே கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள பிரான்மலை அருகே தேனம்மாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (50). இவர் அன்றாடம் கிடைக்கும் வேலையை செய்துவரும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். மாதவன் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர், இவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பார்வதியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மார்ச் 17ஆம் தேதி மாலை முதல் மாதவனை காணவில்லை. இதையடுத்து அவரின் மனைவி பார்வதி இரண்டு நாட்களாக கணவரை தேடி வந்துள்ளார். பல இடங்களில் தேடியும் எங்கு கிடைக்காததால் அருகில் உள்ள சதுர்வேதமங்கலம் காவல் நிலையத்தில் மார்ச் 20ம் தேதி இது குறித்து புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மாதவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்த பட்டது. இந்நிலையில் ஒப்பிலான்பட்டியை சேர்ந்த, பார்வதியின் சகோதரர்கள் ஜெயராமன் 40, பாலமுருகன் 38 இருவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக, தனது மைத்துனர் மாதவனை, தாங்களே கொலை செய்து எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரில், அவர்கள் வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் மாதவனின் உடலை புதைத்தாக கூறப்படும் இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்துள்ளனர்.
பின்னர் பாலமுருகன் மற்றும் ஜெயராமனிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாதவனின் மகளை மைத்துனா்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், மாதவன் மகள் வேறு சமுதாயத்தைத் சோ்ந்த ஒருவரைக் காதலித்து சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இரு குடும்பங்களுக்கும் சிறு தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து மார்ச் 17 அன்று மாதவனை செல்போனில் அழைத்த மைத்துனர்கள், அவரை சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் இடத்திற்கு வர வேண்டும் என்றும் சந்தேகம் எழாமல் பேசி வரவழைத்துள்ளனர். பின்னர் இருவரும் அவரை தாக்கி கொலை செய்து அவர்கள் வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் புதைத்துள்ளனர். விசாரணைக்கு பின் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரில் கோழிப்பண்ணையில் புதைக்க பட்ட மாதவனின் உடலை போலீசார் தோண்டி எடுத்து, இதில் வேறு யாரும் சமத்தப்பட்டுள்ளார்களா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைத்துனர்களே கொலை செய்து காவல் நிலையம் எதிரில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரிடம் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தில் டிஎஸ்பி செல்வகுமார் முன்னிலையில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.