
சேலம் குகை லைன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது வீட்டின் முன்புறம் சிறிய அளவில் சப்பாத்தி மாவு கடை வைத்து நடத்தி வருகிறார் நாள் தோறும் கடை மற்றும் வீட்டில் சேரும் குப்பைகளை காலையில் வரும் மாநகராட்சி குப்பை வண்டியில் கொட்டுவதை குமார் வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல் இன்று காலையும் தனது வீடு மற்றும் கடையில் சேகாரமான குப்பைகளை மாநகராட்சி குப்பை வண்டியில் கொட்ட எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 48வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயாவின் கணவர் ராமலிங்கம், குப்பைகளை இந்த வண்டியில் கொட்ட கூடாது வேறு வண்டியில் கொட்டு என குமாரிடம் சொல்லியுள்ளார்.
அதற்கு குமார் “நான் என் இந்த வண்டியில் குப்பைகளை கொட்ட கூடாது” என கேட்டுள்ளார் அதற்கு ராமலிங்கம் முறையான பதில் கூறாமல் குமாரை குப்பை கொட்ட விடாமல் தடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து ராமலிங்கத்தின் பேச்சை மீறி குமார் மாநகராட்சி வண்டியில் குப்பையை கொட்டி இருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம் தகாத வார்த்தையில் பேசியதோடு குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த குமாரின் உறவினர்கள் அவருக்கு ஆதரவாக ராமலிங்கத்திடம் பேசியபோது அவர்களையும் ராமலிங்கம் தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களும் ராமலிங்கத்திடன் வாக்குவாதம் செய்தனர். எனவே ராமலிங்கம் போன் செய்து மேலும் இருவரை தனக்கு ஆதரவாக வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து அனைவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் விலகி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறாக நடந்துகொண்ட ராமலிங்கம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பிரபாகரன், கார்த்திக் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை வண்டியில் குப்பை கொட்டுவதற்கு இருதரப்பினர் சண்டை போட்டுக்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.