பயன்பாட்டுக்கு வராத புதிய மேம்பாலம்... பார் போல மாற்றி வரும் சமூக விரோதிகள்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா காணாமல் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. பெரும் பொருட்செலவில் தயாரான பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்பதற்கு விடை தேடுகிறது இந்த செய்தித்தொகுப்பு
பயன்பாட்டுக்கு வராத புதிய மேம்பாலம்... பார் போல மாற்றி வரும் சமூக விரோதிகள்...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வெளிமாநிலங்களான வாரணாசி, புவனேஸ்வர், திருப்பதி போன்ற பகுதிகளுக்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட் பலமுறை மூடப்படும் நிலை ஏற்படும். பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வந்தது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கீழக்கரை சாலையில் 2018ம் ஆண்டு 30.74 கோடி ரூபாயில் புதிதாக தொடங்கப்பட்ட பாலப்பணிகள் கடந்த 6 வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளால் மந்தகதியில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததன. பாலத்தின் இருபுறங்களிலும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, தூண்கள் முழுவதிலும் வண்ணப்பூச்சு வேலைகளும் முடிந்தது.

ஆனால் திறப்பு விழா காண்பதற்கு தயாரானபோதும், இதுவரை மேம்பாலம், மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இதுதவிர புதிய மேம்பாலம் இரவு நேரங்களில் திறந்தவெளி மதுபானக் கூடமாகவே மாறிப் போனது. பாலத்தை பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியபோதும், தடையை மீறி நுழையும் சமூக விரோதிகள், மதுஅருந்தி விட்டு கண்ணாடி பாட்டில்களை அங்கேயே உடைத்தும் விடுகின்றனர்.

பாலத்தின் மையப்பகுதியில் மின்சார ரயில்கள் செல்வதற்கான உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது.

மக்களுக்காக புதிய பாலம் கட்டப்பட்டாலும், பயன்பாட்டுக்கு வராததால் யாருக்கு என்ன பலன் என கேள்வி எழுப்புகின்றனர் ராமநாதபுரம் பகுதி மக்கள்.

தமிழக அரசு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பாலத்தை திறப்பதற்கு வழிவகுக்குமா? மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com