தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்தவர்கள் போடா பிரவீன் - குமாரி தம்பதி. இவர்களில் பிரவீன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு திருமண வாழ்க்கையில் இணைந்த பிரவீன் - குமாரி தம்பதியருக்கு 5 வயதில் கிருஷிகா, 3 வயதில் கிருத்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கடந்த மே 28-ம் தேதியன்று மனைவி, குழந்தைகளுடன் கம்மம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
மஞ்சுகொண்டா என்ற பகுதியில் சென்றபோது, கார் விபத்துக்குள்ளாகி அதில் குமாரி, 2 பெண் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டிய பிரவீன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து சந்தேகமடைந்த குமாரியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. விபத்து நடந்த இடத்தில் குமாரி மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெரிதாக எந்த அடியும் ஏற்படவில்லை என்றாலும் உயிரிழந்தனர். அதே நேரம் காரில் இருந்து காலியாக கிடந்த ஊசி சிரிஞ்ச் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சேகரிக்கப்பட்ட தடயங்களை ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ததில் பிரவீன், மயக்க மருந்து கொடுத்து மனைவி, குழந்தைகளை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
ஐதராபாத்தில் வசித்து வந்த பிரவீனுக்கு உடன் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த பிரான்சிஸ் என்ற செவிலியருடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டது. இந்த விவகாரம் குமாரிக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து கணவன் - மனைவி இடையே நாள்தோறும் தகராறு உண்டானது.
இதற்கு மேலும் மனைவியை உயிருடன் வைத்திருந்தால் கள்ளக்காதலியை சந்திக்கவே முடியாது என நினைத்தவர், குமாரியை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடந்த மே மாதம் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மனைவி, குழந்தைகளோடு பாவ்ஜி தாண்டாவுக்கு சென்றார்.
அங்கு மனைவிக்கு ஊசி போட்டு கொலை செய்வதற்கு பல முறை முயற்சி செய்தார். பிரவீன் ஏற்கெனவே மயக்கவியல் மருத்துவ நிபுணர் என்பதால், எந்த அளவு மயக்க மருந்து கொடுத்தால், எத்தனை மணி நேரத்தில் உயிர் போகும் என தெரிந்திருந்தது. ஆனால் முதல் மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து மனைவியை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி மே 28-ம் தேதியன்று காரில் வந்தபோது மெடிக்கலில் கால்சியம் ஊசி போடுவதாகக் கூறி அதிகப்படியான மயக்க மருந்து கலந்து குமாரிக்கு செலுத்தினார். மேலும் தனது இரு குழந்தைகளின் மூக்கையும், வாயையும் பொத்திய பிரவீன் காரை வேண்டுமென்றே இடித்து விட்டு விபத்து நடந்ததாக நாடகமாடினார்.
இந்த சம்பவம் நடந்து ஒன்றரை மாதத்துக்கு பிறகு போலீசார் தீவிரமாக விசாரித்து மருத்துவர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியையும், 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் தெலங்கானா மக்களை திகைப்படைய செய்துள்ளது.