யூடியூபர்களை மது போதையில் மிரட்டும் இளைஞர்கள்

சென்னையில் பரபரப்பான ரிச்சி தெருவில் வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர்களை குடிபோதையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபர்களை மது போதையில் மிரட்டும் இளைஞர்கள்

சென்னை மாநகரிலேயே எலெக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல் போன்கள் உள்பட மின்சாதன பொருட்கள் வாங்குபவர்களுக்கு கடல் போல விளங்குவதுதான் ரிச்சி ஸ்ட்ரீட்... எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று எலக்ட்ரிக் சாதனங்கள் வாங்கி செல்வதுண்டு.

இந்நிலையில் பிரபல யூ-டியூபர் நந்தா என்பவர் ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு சென்று செல்போன் கடைகள் குறித்து வீடியோ எடுத்து அதனை அவரது யூ-டியூபில் பதிவேற்றம் செய்வதற்காக ஜூலை 7-ம் தேதி சென்றிருந்தார்.

அப்போது அதே பகுதியில் இளைஞர்கள் சிலர், மது அருந்திக் கொண்டிருந்தனர். செல்போனில் வீடியோ எடுத்தவாறே சென்ற நந்தாவை திடீரென அதட்டி அழைத்தவர்கள், மிரட்டல் தொனியில் பேசி செல்போனை பறித்தனர்.

DD2

தாங்கள் மிகப்பெரிய ரவுடி என்றும், இப்போதே தங்களிடம் சேர்ந்து விடுமாறும் அவர்கள் பேசியதால், நந்தா மற்றும் அவரது நண்பர் செய்வதறியாது திகைத்தனர்.

செல்போனை பறித்துக் கொண்டவர்களை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, ஆட்டோவில் மது பாட்டில்களுடன் பயங்கர ஆயுதங்கள் இருந்ததால் நந்தா பதற்றமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போதையில் இருந்தவர்களிடம் பேசி சமாதானம் செய்து கேமராவை வாங்கி, நந்தாவிடம் ஒப்படைத்து அனுப்பினர்.

இதை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த நந்தா, அவரது யூ-டியூப் சேனலிலும், எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டு காவல்துறை மற்றும் முதலமைச்சருக்கு டேக் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் சென்னை காவல்துறை தனது எக்ஸ் தளத்தில், தகுந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

DD2

இதைத் தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் போதையில் மிரட்டல் விடுத்த பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன் மற்றும் கிஷோர் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில் பார்த்திபன் மீது திருட்டு வழக்கு, கிஷோர் மீது மனைவியை தாக்கியது போன்ற வழக்குகளில் கைதானவர்கள் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் பட்டப்பகலிலேயே மதுபோதையில் இளைஞர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபடும் இதுபோன்ற சம்பவங்களால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com