

செங்கல்பட்டு அருகே நடந்த பேட்டரி கடை தகராறில் கொடூரம், இளைஞர் தலையில் கத்தியால் வெட்டியும் கல்லைப்போட்டும் படுகொலை செய்த கும்பல். சாதாரணமாக காவல் நிலையம் சென்று “நாங்க தான் கொலை செஞ்சோம்" என போலீஸாரையே அதிரவைத்த கொலையாளிகளின் பின்னணி.
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே, பேட்டரி வாங்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (எ) கருப்பட்டி சந்துரு (35). இவர் செட்டிபுண்ணியம் கிராமத்தில் தங்கி நெல் அறுவடை செய்யும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகேந்திரா சிட்டி ஜங்ஷன் பகுதியில் பேட்டரி கடை வைத்துள்ள அஜித் (30) என்பவரிடம் சந்துரு பேட்டரி வாங்கியுள்ளதாக தெரிகிறது . அந்த பேட்டரி தரமற்றதாக இருந்ததால் ஆத்திரமடைந்த சந்துரு, அஜித்துடன் தகராறில் ஈடுபட்டதோடு, சந்துருவின் கடையின் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பகை தொடரவே, ஆத்திரமடைந்த பேட்டரி கடையின் உரிமையாளர் அஜித், தனது நண்பர்களான ராஜேஷ் (30) மற்றும் மேலும் ஒருவருடன் சேர்ந்து சந்துருவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அப்போது செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் அருகே மது அருந்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்துருவை மறித்த மூவர் கூட்டாக சேர்ந்து சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துருவை விட்டு செல்லாமல் அவரின் தலையில் பெரிய கல்லை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சிங்கபெருமாள்கோவில் போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சந்துருவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சந்துரு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய சிங்கபெருமாள்கோவில் பகத்சிங் நகரைச் சேர்ந்த பேட்டரி கடை உரிமையாளர் அஜித் மற்றும் அவரது நண்பரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்றுள்ளனர். அங்கு காவலர்களிடம் “நாங்கள் தான் கொலை செய்தோம்” என சாதாரணமாக கூறி சரணடைந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் மற்றும் தலையில் கல்லை போட்டது, தப்பி சென்ற மூன்றாவது நபர் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடம் சிங்கபெருமாள்கோவில் காவல் எல்லைக்குட்பட்டது என்பதால், சரணடைந்த இருவரையும் செங்கல்பட்டு நகர போலீசார் சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்றொரு நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேட்டரி கடை தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய வியாபாரத் தகராறு மற்றும் ஆத்திரத்தினால் ஏற்பட்ட மோதல், இன்று ஒருவரை வெட்டி கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொது இடத்தில் கொலை செய்து விட்டு, எவ்வித பயமுமின்றி கொலையாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்த விதம் அப்பகுதி மக்களுக்கு பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கூட்டு கொலை முயற்சி சட்டத்தின் மீதான பயமின்மை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தப்பியோடிய அஜித்தின் நண்பரை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து சிங்கபெருமாள்கோவில் போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.