தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய மணிக்குமார் . இவரது மனைவி 33 வயதுடைய சந்திரலேகா. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 15 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதுடன், விவாகரத்து தொடர்பான வழக்கு நடைபெற்று கணவரைப் பிரிந்த சந்திரலேகா தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார். குழந்தைகள் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மணிக்குமார் தனது மனைவி மீது ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சந்திரலேகாவின் நடவடிக்கைகள் குறித்து திருப்பூரில் உள்ள உறவினர்கள் மூலம் மணிக்குமார் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சந்திரலேகா தனது சொந்த ஊரான தேவாரத்திற்கு வருவதாக மணிக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நேற்று இரவு திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து தேவாரம் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்தில் சந்திரலேகா தனது மகள் சஞ்சனா ஸ்ரீயுடன் பயணம் செய்துள்ளார்.
இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதில் ஏறிய மணிக்குமார், சந்திரலேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த மணிக்குமார், ஓடும் பேருந்திலேயே சந்திரலேகாவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. தாயை காப்பாற்ற முயன்ற அவரது மகள் சஞ்சனா ஸ்ரீக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதையடுத்து, அரசுப் பேருந்தை வத்தலக்குண்டு காவல் நிலையம் முன்பு நிறுத்திய பயணிகள், மனைவி மற்றும் மகளை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணிக்குமாரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த சந்திரலேகா மற்றும் அவரது மகள் சஞ்சனா ஸ்ரீ ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிக்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஓடும் அரசுப் பேருந்தில் மனைவி மற்றும் மகளை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் வத்தலக்குண்டு மற்றும் தேவாரம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.