

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதுடைய மூக்கன். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உலா நிலையில் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான வாட்ச்மேனாக பணிபுரியும் 50 வயதுடைய தங்க கணபதி என்பவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். வழக்கம் போல் நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் குடிபோதையில் பேசிகொண்டிருந்த இருந்ததாகக் கூறப்படும் நிலையில், வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மூக்கன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்க கணபதியை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை தங்க கணபதி அவரது சகோதரருக்கு போன் செய்து தெரிவித்திருக்கிறார்.
எனவே இந்தத் தாக்குதல் குறித்து தகவலறிந்த ஆவேசமடைந்த தங்க கணபதியின் சகோதரரான குமரேசன் என்பவர், உடனடியாக மூக்கனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த மோதலில் மூக்கன் மற்றும் தங்க கணபதி ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூக்கனை வெட்டி விட்டு தங்க கணபதியின் தம்பி குமேரசன் தப்பித்து சென்ற நிலையில். மூக்கனின் நிலையை பார்த்து அவரது மனைவி மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரை எழுப்பிய அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த மூக்கன் மற்றும் தங்க கணபதி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் குடிபோதையில் சண்டை போட்டு அரிவாள் வெட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.