

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் 17 வயதுடைய பாபு. இவர் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். இவரை தனது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இந்த பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாபுவின் பெற்றோர் சுப நிகழ்விற்காக அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
எனவே பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். பாபுவை வீட்டில் தனியாக விட்டு சென்ற நிலையில் அவரது பெற்றோர்கள் அடிக்கடி பாபுவிற்கு போன் செய்து விசாரித்து வந்துள்ளனர். அவ்வாறு நேற்று காலை முதல் பாபுவின் சகோதரர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் பாபு பதில் அளிக்காமால் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாபுவை சகோதரர் அவரது நண்பரை தனது வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். இரவு வெகு நேரமாகிவிட்டதால் அவரது நண்பர் காலையில் சென்று பார்க்கிறேன் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதனை தொடர்ந்து இன்று பாபாவுவின் வீட்டிற்கு அவரது அண்ணனின் நண்பர் சென்று பார்த்த நிலையில் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. எனவே அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது 17 வயது சிறுவனான பாபு கை, கால்கள் கட்டப்பட்டு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சோழவரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர், கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் நண்பர்களிடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட மோதலா அல்லது ஏதேனும் கள்ளக்காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் அரங்கேறியதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுவன் கை கால்கள் கட்டப்பட்டு பூட்டிய வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.