திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் மாயமான சம்பவத்தில், அவர்களை காவல்துறையினர் ஐந்து மணி நேரத்தில் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு, கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த மாணவிகளை போலீசார் அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் - ஜோதி தம்பதியின் மகள்கள் மகாலட்சுமி மற்றும் மகேஸ்வரி. இதில் மகாலட்சுமி 10ஆம் வகுப்பும், மகேஸ்வரி 9ஆம் வகுப்பும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்களது பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், இருவரும் தண்டராம்பட்டு பஜனை கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அவர்களைத் தேடத் தொடங்கினர். இதேபோல், மகாலட்சுமி மற்றும் மகேஸ்வரியின் உறவினரான நித்யா என்ற 8ஆம் வகுப்பு மாணவியும் அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், பாட்டி உண்ணாமலையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு மூன்று மாணவிகளும் ஒரே நாளில் மாயமானதால், அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதையடுத்து, மாணவிகளைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மாயமான மூன்று மாணவிகளும் நேற்று (அக் 27) இரவு சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு, கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு அவர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர், மூவரையும் மீட்டு தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
மாணவிகள் மாயமானதாகத் தகவல் வெளியான நிலையில், ஐந்து மணி நேரத்திற்குள் அவர்களைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மூன்று மாணவிகளும் எதற்காக சென்னைக்குச் சென்றனர், வீட்டுக்குத் திரும்பாமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்