“நெல்லையில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து ரீல்ஸ்” - போலீசில் சிக்கிய 23 வயது இளைஞர்.. லைக்ஸுக்காக விபரீதம்!

போலீசாரைக் கண்டதும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக்...
Tirunelveli Country Bomb Incident
Tirunelveli Country Bomb Incident
Published on: 
Updated on: 
1 min read

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறப்படும் இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெடிகுண்டை வெடிக்கச் செய்த மற்றொரு இளைஞரைத் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளியில், இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை மற்றொரு இளைஞர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரைப் போலீசார் பார்த்துள்ளனர். போலீசாரைக் கண்டதும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அவரைப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நெல்லை சமாதானபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அஸ்வின் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அஸ்வினைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், வயல்வெளியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்படும் நபர், நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள அய்யப்பனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டைத் தயாரித்ததன் பின்னணி என்ன, அதனை வெடிக்கச் செய்து வீடியோ வெளியிட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com