திருநெல்வேலி மாவட்டம், அருகே இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் மனைவியை கல்குவாரி குட்டையில் தள்ளி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். ஒன்றரை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த இந்தக் கொலை வழக்கில், மனைவியின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில், “குற்ற உணர்ச்சியால் பல மாதங்களாக சரியாக தூங்கவில்லை” என கணவர் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்த கொண்டா நகரத்தைச் சேர்ந்தவர் 38 வயதுடைய மகாராஜா. சிப்காட் தொழிலாளியான இவர், கடந்த 2008-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அமராவதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு மகாராஜா தனது அத்தை மகளை 2-வதாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அமராவதி, கணவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அமராவதி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இருப்பினும், அவ்வப்போது நெல்லைக்கு வந்து கணவர் மகாராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் மகாராஜாவுடன் ஒன்றாக சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து தாய் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மகாராஜா, அமராவதியை தனது மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான்குளம் பழைய கல்குவாரி குட்டைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மகாராஜா அமராவதியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அமராவதியை கல்குவாரி குட்டையில் தள்ளி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியை கொலை செய்த பின்னர், எதுவும் நடக்காதது போல் மகாராஜா உறவினர்களிடம் “அமராவதி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக” நடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மகன்களுடன் சேர்ந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இதற்கிடையே, கடந்த ஓராண்டாக அமராவதியின் தாயார் பலமுறை அவரை தொடர்புகொள்ள முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அமராவதியின் தங்கை விஜயலட்சுமி, கடந்த (செப் 23) ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அமராவதி மாயமான விவகாரத்தில் அவரது கணவர் மகாராஜா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகாராஜா மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் பல மாதங்களாக சரியாக தூங்கவில்லை என்றும், போலீசார் உண்மையை கண்டுபிடித்ததும் தானாகவே நடந்ததை தெரிவித்ததாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மகாராஜாவை கொலை நடந்ததாக கூறப்படும் பாப்பான்குளம் பழைய கல்குவாரிக்கு போலீசார் அழைத்துச் சென்று, அங்கு தேடுதல் நடத்தியபோது அமராவதியின் மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் சேலை ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக கூறப்படும் மகாராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஒன்றரை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த கொலை வழக்கு தற்போது அம்பலமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்