திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் அருகே, உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மமிதா மொண்டல் மற்றும் அவரது மனைவி சாயந்தி தாஸ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அதே நிறுவனத்தில், அவர்களது சொந்த ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணா மொண்டல் என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று(அக் 09) இரவு மமிதா மொண்டல் மற்றும் சாயந்தி தாஸ் ஆகியோருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சாயந்தி தாஸ் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரை ராமகிருஷ்ணா மொண்டல் தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவருக்கு மயக்கம் தெளிந்த நிலையில் காட்டுப் பகுதியில் வைத்து ராமகிருஷ்ணா மொண்டல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாயந்தி தாஸ் புகார் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பி வந்த அவர், நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மமிதா மொண்டல் உடனடியாக இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமகிருஷ்ணா மொண்டலை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் சாயந்தி தாஸை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செயப்பட்டுள்ளது. எனவே பொலிஸார் ராமகிருஷ்ணா மொண்டலைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்