“வாலிபரை வெட்டிக் கொன்ற பள்ளி மாணவன்” - ஐபோன் மூலம் வெடித்த தகராறு.. திட்டமிட்டு கத்தி வாங்கியது அம்பலம்!

மீன் மற்றும் இறைச்சி வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியைப் புதிதாக வாங்கிய பள்ளி மாணவர்...
Tiruppur College Student Murder 2.
Tiruppur College Student Murder 2.
Published on: 
Updated on: 
2 min read

திருப்பூரில் திருட்டு ஐபோன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக, கல்லூரி மாணவரை 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஏபிடி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் ஸ்ரீ ஹரி. இவர் கொடுவாய் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் மூலம் திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் பாலாஜியுடன் ஸ்ரீ ஹரிக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனக்கு செல்போன் வாங்க வேண்டும் எனப் பள்ளி மாணவர் ஸ்ரீ ஹரியிடம் தெரிவித்துள்ளார். அப்போது, குறைந்த விலையில் ஐபோன் கிடைப்பதாகக் கூறிய ஸ்ரீ ஹரி, அதை வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பள்ளி மாணவர் ரூ.8,000 கொடுத்து ஐபோன் வாங்கியுள்ளார். ஆனால், அந்தச் செல்போன் லாக் செய்யப்பட்டிருந்ததுடன், அது திருட்டு செல்போன் என்பதும் பின்னர் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ஹரியிடம் பள்ளி மாணவர் கேட்டபோது, கரூரில் இருந்து செல்போன் வாங்கி வந்ததாகவும், வேறு செல்போனை மாற்றித் தருவதாகவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பள்ளி மாணவரிடம் இருந்து செல்போனைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ ஹரி, புதிய செல்போனையும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் செல்போன் அல்லது பணம் கொடுக்காததால் பள்ளி மாணவர் ஆத்திரமடைந்ததாகத் தெரிகிறது. இதனால், மீன் மற்றும் இறைச்சி வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியைப் புதிதாக வாங்கிய பள்ளி மாணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீ ஹரியைத் தாக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் (அக் 10) வீட்டில் இருந்த ஸ்ரீ ஹரியை வெளியே செல்லலாம் எனக் கூறி அழைத்துச் சென்ற பள்ளி மாணவர், சிறிது தூரம் சென்றதும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. தலை, கை, கால், கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதில் ஸ்ரீ ஹரி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, பள்ளி மாணவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், கே.வி.ஆர். நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசாரின் உதவியுடன் படுகாயமடைந்த ஸ்ரீ ஹரி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 17 வயது பள்ளி மாணவர், திருப்பூர் நீதிமன்றத்தில் நேரடியாகச் சென்று சரணடைந்தார். ரூ.8,000 மதிப்பிலான செல்போன் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, கல்லூரி மாணவரின் கொலையில் முடிந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com