திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரபாளையம் அடுத்த மூகாம்பிகை நகர் குடியிருப்பு பகுதியில் லைன் வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற வடக்கு காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் உள்ளே பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளார். அவரது கணவர் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில் பெண் இறந்து இரண்டு நாட்கள் ஆகிறது என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்த போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (27), ஸ்ரீமதி (20), என்பதும் இவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் திருப்பூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி சரவணகுமார் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. தற்போது சம்பவம் நடந்த மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இருவரும் வாடகைக்கு குடித்தனம் நடத்திவந்துள்ளனர்.
இதனுடைய நான்கு மாத கர்ப்பிணியான ஸ்ரீமதி வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்துள்ளார். சரவணகுமாரும் சரியாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார். மேலும் சரவணகுமாருக்கு, ஸ்ரீமதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையில் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்ததும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டுக்கு வந்து அடித்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கோபம் தலைக்கேறிய சரவணகுமார் ஸ்ரீமதியை அடித்ததில் நான்கு மாத கர்ப்பிணியான ஸ்ரீமதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீமதி பிணமாக வீட்டுக்குள் கிடந்துள்ளார்.
இரண்டு நாட்களாக கொலையை மறைக்க சரவணகுமார் முயன்றுள்ளார். மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது போல செட் செய்ய முயன்றும் அது முடியாமல் போனதால் 3ம் தேதி மதியம் வீட்டுக்கு வந்து கதவைத் தாளிட்டு மின் விசிறியில் துப்பட்டாவால் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இருவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்க போலீசார் அவர்களை திருப்பூருக்கு அழைத்துள்ளனர். அவர்கள் திருப்பூர் வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். காதலித்து திருமணம் செய்த பெண்ணை அடித்து கொடுமை செய்து கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.