“மகள்கள் கண் முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட தந்தை” - காதல் விவகாரத்தில் வெறிச்செயல்.. அலட்சியம் காட்டியதா போலீஸ்?

அங்கு விஷ்ணுவை கட்டையால் தாக்கியதாகவும், பின்னர் டியூஷனில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் சென்று ஆபாசமாக பேசி...
murder in love issue
murder in love issue
Published on: 
Updated on: 
2 min read

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதுடைய ராஜா. இவர் திருத்தணியில் உள்ள திரையரங்கில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி 39 வயதுடைய துர்கா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் 17 வயதுடைய மூத்த மகள், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாணவி தாழவேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், மாணவி வேறு ஒரு இளைஞருடன் பழகி வந்ததால் அவர் ஆத்திரமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுவன் தனது நண்பரான பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து லாரன்ஸ் (31), அவரது தம்பி சுசில் (27), சுசிலின் மனைவி ரோஸி (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இணைந்து, மாணவியிடம் பேசி வந்த விஷ்ணுவை கடந்த வாரம் பெரியார் நகர் கல்குவாரி அருகே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு விஷ்ணுவை கட்டையால் தாக்கியதாகவும், பின்னர் டியூஷனில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் சென்று ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாய் துர்கா, தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை லாரன்ஸை கைது செய்தனர்.

Admin

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(அக் 04) மாலை பெரியார் நகர் பகுதியில் உள்ள வீட்டில் ராஜா இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் அவரை மகள்கள் மற்றும் மனைவியின் கண்முன்னே சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பட்டாக்கத்தியால் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்டதில் ராஜா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் அவரை மீட்டு காரில் திருத்தணி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரன்ஸ் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் அவரது தம்பி சுசில் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ராஜாவை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, மாணவி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தாமதித்ததாகவும், அதன் காரணமாகவே தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், பெரியார் நகர் பகுதியில் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி பட்டாக்கத்தியை எடுத்துச் சென்று பொதுமக்களை மிரட்டியதாகவும், அப்பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தும் சில இளைஞர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்த திருத்தணி அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராஜாவின் அக்கா மற்றும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர், இந்தக் கொலைக்கு காரணமானவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் போலீசார் முன்னிலையில் பகிரங்கமாக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com