“என்கூட வரமாட்டியா.. அப்போ சாவு” - குடும்பம் நடத்த மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து… தடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

இதனைப் பார்த்த அவரது மாமனார் ரவியும், மாமியார் சாந்தியும் ராஜேஷை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்..
Tiruvallur RK Pet murder attempt
Tiruvallur RK Pet murder attempt
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம் பத்மாபுரம் அருகே இடப்பற்றை கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, மாமனார், மாமியார் ஆகிய மூன்று பேரை மருமகன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி சாந்தி ஆகியோருடன் அவர்களது மகள் ரேகா வசித்து வருகிறார். கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக ரேகா, கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று ராஜேஷ் திடீரென ரேகாவின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், திடீரென கத்தியை எடுத்து ரேகாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவரது மாமனார் ரவியும், மாமியார் சாந்தியும் ராஜேஷை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

அப்போது மேலும் ஆத்திரமடைந்த ராஜேஷ், மாமனார் ரவி மற்றும் மாமியார் சாந்தி ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மூவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ரேகா, ரவி மற்றும் சாந்தி ஆகிய மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை மருமகன் கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com