

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராந்தம் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய கிருஷ்ணன். இவருக்கும் 40 வயதுடைய பூங்கோடி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 9 வயதில் கயல்விழி என்ற மகளும் 7 வயதில் ரிதக்ஷ்சன் என்ற மகனும் இருந்தனர். கிருஷ்ணன் குடும்பத்துடன் சென்னையில் கூலி வேலை செய்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
மனைவியை விட்டு தனிமையில் வசித்து வந்த கணவன் கிருஷ்ணன் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து மூவரும் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு வந்தனர். தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாடிய கிருஷ்ணன் அவரது மனைவி வீட்டிற்கு சென்று “நம் குழந்தைகளின் எதிர்காலம் நினைத்தாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும்” என பேசியுள்ளார். ஆனால் அதற்கு அவரது மனைவி எந்த வித பதிலும் சொல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் சென்னைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த கிருஷ்ணன் நேற்று இரவு தனது அண்ணன் வீட்டில் உணவருந்திவிட்டு தனது வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார். அவரது குழந்தைகள் அண்ணன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை சென்று தனது வீட்டிற்கு அழைத்து வந்த கிருஷ்ணன் மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை வெகுநேரமாகியும் மூவரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது கிருஷ்ணன் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையிலும் அவரது குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணன் இறப்பதற்கு முன் “கள்ளக்காதல் இருந்தால் வாழ்க்கை இது தான் அவளுக்கு தண்டனை, எனது சொத்துக்களையும் மூன்று சவரன் நகைகளையும் ஏமாத்திவிட்டால், அவளது தாய் தந்தைக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும் என நினைத்து ஆனால் அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள் இருப்பதால் வேண்டாம். என் குழந்தைகள் மீது அவளுக்கு கொஞ்சம் கூட பாசம் இல்லை, அவளுடன் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை விட என்னுடன் இறந்துவிடட்டும் என நினைத்தேன்” என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மகன் மற்றும் மகளை கொலை செய்து விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.