இஷ்டத்திற்கு சிகிச்சை... தனியார் மருத்துவமனை மீது புகார்...

தன்னுடைய தாய்க்கு தவறான சிகிச்சை கொடுத்து விட்டு தன்னிடம் அதிகமாக பணம் கேட்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் ஒருவர்.
இஷ்டத்திற்கு சிகிச்சை... தனியார் மருத்துவமனை மீது புகார்...
Published on
Updated on
2 min read

சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசலு. இவருடைய தாய் பானுமதி என்பவருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டது. அவரை கடந்த மே மாதம் 13ம் தேதி அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பானுமதியை முழு உடல் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும் அதற்கு மேல் எந்த தொகையும் கட்டத் தேவையில்லை எனவும் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஒப்புக்கொண்ட பானுமதியின் மகன் சீனிவாசலு 2லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து 7 மணி நேரம் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பானுமதிக்கு ஐ சியு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

4 நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தையல் பிரிந்து விட்டதாகவும், உடனடியாக மருத்துவர்கள் தங்கள் மீதுதான் தவறு என்பதை ஒப்புக்கொண்டனர் எனவும் அதனை உடனடியாக சரி செய்து விடுகிறோம் எனவும் உறுதி அளித்து மீண்டும் அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் வார்டுக்கு மாற்றும் பொழுது உடலில் செல்லக்கூடிய குழாயில் அடைப்பு இருந்ததால், யாருடைய அனுமதியும் இல்லாமல் பித்தப்பையை எடுத்து விட்டதாகவும், இதற்காக செய்யப்பட்ட பரிசோதனைகளுக்கு சுமார் 18 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் எனவும் அதிர்ச்சியளித்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

இதனால் அண்ணா நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் சீனிவாசலு. ஆனால் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ள அவர், நடக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்த தன்னுடைய தாய், 50 நாட்களாக ஆகாரம் இல்லாமல் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

54 நாட்களாக மருத்துவமனையில் பானுமதிக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாக கூறும் நிர்வாகம், குடும்ப பிரச்சனையின் காரணமாக பணம் கட்ட முடியாத சூழ்நிலையால் சீனிவாசலு புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தங்களுடைய மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு இதேபோன்று வேறு தனியார் மருத்துவமனையில் எவ்வளவு செலவாகும் என்பதை ஒப்பிட்டு பார்க்க கூறுகின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். மருத்துவமனையின் பதிலால் யார் மீது தவறு, என்ன நடவடிக்கை எடுப்பது? என்று குழம்பிப்போய் இருக்கிறது போலீஸ்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com