திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி கிரசர் சாலையில் பாலத்திற்கு அடியில் கடந்த (செப் 25) ஆம் தேதி இளம் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற புலிவலம் போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் என்பவரது மகள் 35 வயதுடைய சுகன்யா என்பது தெரியவந்தது. இவர் காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் குழந்தையுடன் தனது தகப்பனாரின் வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சுகன்யா கடன் கொடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுகன்யா கண்ணனூர் அருகே சமத்துவபுரத்தில் உள்ள தனது தோழியிடம் கொடுத்த கடன் தொகையை வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது சடலம் கரட்டாம்பட்டியில் இருந்து வெளியனுர் செல்லும் சாலையில் உள்ள பாலம் ஒன்றின் அடியில் கிடந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் கண்ணனூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் சத்யா என்பவரிடம் கொடுத்த கடன் தொகையை வாங்க கடைசியாக சென்றது தெரியவந்தது.
எனவே போலீசார் சத்யா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியபோது சுகன்யா கொடுத்த கடனை திரும்ப கேட்க சென்ற போது அங்கு ஏற்பட்ட தகராறில் சத்யா மற்றும் அவரது கணவன் துரைராஜ் ,மகன் விஜய், மற்றும் அவரது உறவினர் இருவர் என அனைவரும் சேர்ந்து சுகன்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கின்றனர். பின்னர் அவரது உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து கரட்டாம்பட்டி பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டு, சுகன்யாவின் இருசக்கர வாகனத்தை காளிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில் சுகன்யா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட துரைராஜ்(42), துரைராஜ் மனைவி சத்யா(39), துரைராஜ் மகன் விஜய்(20), இவரது உறவினர்கள் சேலம் மாவட்டம் முட்டல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல்(39), சக்திவேல் ம னைவி செல்வி(35) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். கொடுத்த கடனை திருப்பி கேட்ட கல்லூரி ஆசிரியரை குடும்பமாக சேர்ந்து கொலை செய்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்