வாகனங்களின் Speed Limite-யே மாற்றிய கும்பல்! சோதனையில் சிக்காமல் தப்பிக்க பயன்படுத்திய நூதன தொழில்நுட்பம்!

மோசடியில் சாதாரண கருவிகளைப் பயன்படுத்தாமல், பிரத்யேக கணினி அமைப்புகள் மற்றும் மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Guwahati truck speed limiter scam
Guwahati truck speed limiter scam
Published on: 
Updated on: 
3 min read

வணிகப் பயன்பாட்டுக்கான லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் குறிப்பிட்ட வேக வரம்பை மீறிச் செல்லக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளையே ஏமாற்றும் வகையில் ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளை மாற்றி, நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை அதிகரித்துக் கொடுத்ததுடன், அதிகாரிகளின் சோதனையின்போது மட்டும் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் செயலுக்குப் பின்னால் மேலும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வணிக வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டு அமைப்பில் சட்டவிரோதமாக மாற்றங்களைச் செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கும்பலின் செயல்பாடுகள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், உத்தவ் ராய் என்பவரையும் அவருடன் தொடர்புடைய சிலரையும் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து உத்தவ் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய மற்ற நபர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மோசடியில் சாதாரண கருவிகளைப் பயன்படுத்தாமல், பிரத்யேக கணினி அமைப்புகள் மற்றும் மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கவுகாத்தியில் உள்ள கரிமா மில்லேனியம் என்ற இடத்தை மையமாக வைத்து இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாகனங்களின் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பில் மாற்றங்களைச் செய்யத் தேவையான கணினிகள் மற்றும் மென்பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பொதுவாக நவீன வாகனங்களில் என்ஜினின் செயல்பாடுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு ECU எனப்படும் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் பயன்படுத்தப்படுகிறது. வாகனத்தின் என்ஜின் எவ்வாறு செயல்பட வேண்டும், அதன் செயல்திறன் எந்த அளவில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த மின்னணு அமைப்பு நிர்வகிக்கிறது. குறிப்பிட்ட வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு தொடர்பான அமைப்புகளும் இதன் மூலம் செயல்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தையே தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளின்படி வணிக வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இந்தக் கும்பல் வாகனங்களின் ECU மென்பொருளில் மாற்றம் செய்து, அந்த வேக வரம்பை அதிகரித்துக் கொடுத்துள்ளது. இதனால் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் சோதனை முறையையும் ஏமாற்றும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயம். ஒரு வாகனம் சாலையில் இயக்குவதற்குத் தகுதியானதா என்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனத் தகுதிச் சோதனை நடத்தப்படுகிறது. அந்தச் சோதனையில் வாகனத்தின் பல்வேறு அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட கும்பல், சோதனை நடைபெறுவதற்கு முன்பு வாகனத்தின் ECU மென்பொருளை மீண்டும் மாற்றியுள்ளனர். அதாவது, ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டிருந்த வேக வரம்பை நீக்கிவிட்டு, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மணிக்கு 80 கிலோமீட்டர் என்ற அளவுக்கு மீண்டும் மாற்றியுள்ளனர். இதனால் வாகனம் சோதனைக்கு வரும்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

வாகனம் தகுதிச் சோதனையில் தேர்ச்சி பெற்று சான்றிதழைப் பெற்ற பிறகு, மீண்டும் அதே மென்பொருளைப் பயன்படுத்தி வேக வரம்பை அதிகரித்துள்ளனர். இதனால் சோதனையின்போது மட்டும் வாகனம் விதிமுறைகளைப் பின்பற்றுவது போலவும், சாலையில் இயக்கும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடியதாகவும் மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஒரே வாகனத்தின் வேகக் கட்டுப்பாட்டு அமைப்பை தேவைக்கேற்ப மாற்றி, அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பித்து வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல்துறை துணை ஆணையர் மிருணால் தேகா, இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட உத்தவ் ராய் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், இதுவரை எத்தனை வாகனங்களில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனங்களின் தகுதிச் சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளில் யாராவது உதவி செய்தார்களா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு என்பது வெறும் அரசு விதிமுறை மட்டுமல்ல. சாலையில் பயணம் செய்யும் ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது. அதிக எடையுடன் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படும்போது, திடீரென பிரேக் போட வேண்டிய சூழலில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். குறிப்பாக லாரிகள் போன்ற பெரிய வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், மற்ற வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டு மென்பொருளையே திட்டமிட்டு மாற்றி, சோதனையின்போது மட்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்ததாகக் கூறப்படும் இந்த மோசடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதிமுறைகளை ஏமாற்றும் முயற்சிகள் எவ்வளவு திட்டமிட்ட வகையில் நடைபெறுகின்றன என்பதையும் இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கும்பலின் முழுமையான செயல்பாடுகள், மோசடியில் பயன்படுத்தப்பட்ட மென்பொருட்கள், மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்துத் துறை தொடர்புகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் இந்த மோசடியின் உண்மையான பின்னணி முழுமையாக தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.